< Back
மாநில செய்திகள்
நச்சலூர் பகுதியில் தொடர் கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்தன
கரூர்
மாநில செய்திகள்

நச்சலூர் பகுதியில் தொடர் கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்தன

தினத்தந்தி
|
29 April 2023 7:24 PM GMT

நச்சலூர் பகுதியில் ெதாடர் கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழை

கரூர் மாவட்டம், நச்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நச்சலூர், பொய்யாமணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த தொடர் கனமழையால் நச்சலூர் பகுதியில் பல ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழைமரங்கள் சாய்ந்தன

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்து உள்ளோம். பலர் கட்டளை மேட்டு வாய்க்காலை நம்பி சாகுபடி செய்துள்ளனர். பலர் சொந்தமாக ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மேலும் பல விவசாயிகள் டீசல் ஊற்றி ஆயில் என்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி வாழைகளை காப்பாற்றி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெட்டும் தருவாயில் இருந்த வாழைமரங்கள் பல சாய்ந்து சேதமடைந்து விட்டது.

கோரிக்கை

மழைக்கு முன்பு வாழைத்தார்கள் கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனைக்கு எடுக்கப்பட்டது. தற்போது வாழைத்தார்களை ரூ.20 விற்பனையாகிறது. இதனால் நாங்கள் கடன் வாங்கி செலவு செய்த பணம் வீணாகி உள்ளது. இதனால் வாழைமரத்தை நம்பி இருந்த எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் நலன் கருதி அரசு கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்