< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதால்  உரிமையாளர்கள் ஆவேசம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதால் உரிமையாளர்கள் ஆவேசம்

தினத்தந்தி
|
24 Aug 2023 4:33 PM IST

மாமல்லபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. உரிமையாளர்கள் ஆவேசம் அடைந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறாக

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை, ஒத்தவாடை தெரு, ஐந்து ரதம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கங்கை கொண்டான் மண்டபம் சாலை, மாதா கோவில் தெரு, அண்ணல் அம்பேத்கர் தெரு, ராஜிவ்காந்தி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றி திரிவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதேபோல் சுற்றுலா வாகனங்கள் செல்லாதவாறு மாமல்லபுரம் நகரின் முக்கிய புராதன சின்ன சாலைகளில் மாடுகள் படுத்திருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

மாடுகள் பிடிக்கப்பட்டன

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மாமல்லபுரம் நகரத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்படி கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, கோவளம் சாலை, ஒத்த வாடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரிந்த 41 மாடுகளை பிடித்து லாரி மூலம் அழைத்து சென்று பூஞ்சேரியில் உள்ள பசுமை புல்வெளி பூங்காவில் அடைத்து பாதுகாத்தனர்.

உரிமையாளர்கள் ஆவேசம்

இதற்கிடையில் சாலைகளில் சுற்றி திரியும் பசு மாடுகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உரிமையாளர்கள் மாடுகள் பிடிக்கப்பட்டு பூங்காவில் அடைக்கப்பட்ட சம்பவத்தை கேள்விபட்டு அங்கு திரண்டனர். அங்கு அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் எங்கள் மாடுகளை ஒப்படைத்துவிடுங்கள். இனி நாங்கள் அதனை சாலையில் திரிய விடமாட்டோம் என்று கெஞ்சினர்.

அதற்கு அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விடுவிக்க தங்களுக்கு அதிகாரமில்லை என்றும், அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை அழைத்து செல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறியதால் மாட்டின் உரிமையாளர்கள் ஆவேசமடைந்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் கலெக்டர் உத்தரவின் பேரில் 41 மாடுகளும் வாகனங்கள் மூலம் செங்கல்பட்டு அடுத்து உள்ள கொண்டமங்கலம் பவுண்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்