சென்னை
மதுரவாயலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
|மதுரவாயலில் ரவுடி ஓட ஓட விரட்டி சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 23), இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இரவு மதுரவாயல், கந்தசாமி நகர், 5-வது தெரு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேஷை வழி மறித்து சரமாரியாக தாக்க தொடங்கினர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ராஜேசை வெட்ட தொடங்கினார்கள். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இருப்பினும் மர்ம கும்பல் விடாமல் விரட்டி சென்று ஓட, ஓட விரட்டி வெட்டி ராஜேசை படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.