< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கும்பகோணத்தில், பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
5 Jun 2023 12:15 AM IST

கும்பகோணத்தில் குறைந்த அழுத்த மின் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,ஜூன்.5-

கும்பகோணத்தில் குறைந்த அழுத்த மின் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குறைந்த அழுத்த மின் வினியோகம்

கும்பகோணம் 1-வது வார்டு கொட்டையூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக குறைந்த அழுத்த மின்சாரம் வருவதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒழுங்கற்ற முறையில் மின்சாரம் குறைந்த மின் அழுத்தத்துடன் வருவதனால் மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட மின்சாதனங்கள் இயங்காமல் நின்று விடுவதாகவும், மேலும் சில பொருட்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.

சாலை மறியல்

இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் குறைந்த அழுத்த மின் வினியோகத்தை கண்டித்தும், சீரான முறையில் மின் வினியோகம் செய்யக்கோரியும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கும்பகோணம்- சுவாமிமலை சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது மின்சாரம் சீரான முறையில் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் கூறினர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்