தூத்துக்குடி
குளத்தூரில்வாலிபர் கொலையில் அண்ணன், தம்பி கைது
|குளத்தூரில் வாலிபர் கொலையில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
குளத்தூர்:
குளத்தூர் அருகே கு.சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்காமணி. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 28). இவர் கோவையில் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ந் தேதி அவர் ஊருக்கு வந்திருந்தார். அன்று இரவு நண்பர்களுடன் திருவிழாவுக்கு சென்று வந்தார். மறுநாள் காலையில் சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கு வெளியே உள்ள பனங்காட்டில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாரியப்பனுக்கும், அந்த பகுதியை சேர்ந்த முனியசாமி (40), அவரது தம்பி மாடசாமி (32) ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்து உள்ளது. திருவிழாவுக்காக ஊருக்கு வந்த மாரியப்பனுடன் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முனியசாமி, மாடசாமி ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முனியசாமி, மாடசாமி ஆகியோரை கைது செய்தனர்.