தூத்துக்குடி
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு செய்திருந்தனர். இதில் 54 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து உதவிகலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து நேற்று வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் ராஜா, மத்திய செயலாளர் வில்சன், பொதுக்குழு உறுப்பினர் சுயம்பு தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.