திருவாரூர்
கூத்தாநல்லூரில் மண்பானை, கரும்பு விற்பனை மும்முரம்
|கூத்தாநல்லூரில் மண்பானை, கரும்பு விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகையையொட்டி கூத்தாநல்லூரில் மண்பானை, கரும்பு விற்பனை மும்முரமாக நடந்தது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை என்றாலே டெல்டா மாவட்டங்களில் களை கட்டும் பண்டிகையாகவே ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல், மாட்டு பொங்கல், கன்னியர் பொங்கல் என மூன்று விதமான பண்டிகையாக 3 தினங்கள் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தொடர்ந்து 3 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் பொங்கல் பண்டிகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் கொரோனா கால கட்டங்களில் இந்த பொங்கல் பண்டிகை வெகுவாக களை இழந்து காணப்பட்டது. அதன் பின்னர் மழையால் சாகுபடி பயிர்கள் மற்றும் அறுவடை சேதம் ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை சற்று களை இழந்து தான் இருந்தது.
களை கட்டிய விற்பனை
இந்த ஆண்டு ெபாங்கல் பண்டிகையையொட்டி கூத்தாநல்லூர் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதியில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அப்போது பொங்கல் வைக்க மண்பானை வாங்குவதற்கு பெண்கள் அதிகளவில் மும்முரமாக ஈடுபட்டனர். அதேபோல் கரும்பு, வாழைப்பழம், இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக சென்றனர். இதனால், கூத்தாநல்லூர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது.