அரியலூர்
கொல்லாபுரத்தில் அமைச்சர் சிவசங்கர், ராசா எம்.பி. ஆய்வு
|அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் 29-ந்தேதி முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் சிவசங்கர், ராசா எம்.பி. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 28, 29-ந்தேதிகளில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார். மேலும் 29-ந்தேதி அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதேபோன்று 2 மாவட்டங்களிலும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
அமைச்சர், எம்.பி. ஆய்வு
அந்த வகையில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் பந்தல் பணிகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் விழா நடைபெறும் மேடை, இடம், பயனாளிகளின் எண்ணிக்கை, பயனாளிகள் அமரும் இடம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, நலத்திட்ட உதவிகள் விவரம், அரசு அலுவலர்களின் பிற பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, முதல்-அமைச்சரின் விழா தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கியதுடன், விழா தொடர்பான பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா (அரியலூர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), பிரபாகரன் (பெரம்பலூர்) மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்), அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.