கரூர்
குளித்தலையில், ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
|குளித்தலையில், ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. குளித்தலை நகர கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் குளித்தலை பஸ் நிலைய பகுதியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசை சிவா தலைமை தாங்கினார். குளித்தலை நகர செயலாளர் சிவேஷ்வர்ஷன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு தனது கையெழுத்தை முதலாவதாக பதிவு செய்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, குளித்தலை நகர்மன்ற துணைத் தலைவர் கணேசன், ம.தி.மு.க., தி.மு.க. கட்சி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.