செங்கல்பட்டு
கேளம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு - குப்பை வாகனங்களை சிறைபிடித்தனர்
|கேளம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குப்பை வாகனங்களை சிறை பிடித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள புறநகர் பகுதியாகும். கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் குப்பைகளும் கழிவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், வீடுகள் போன்றவற்றில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் முதலில் கோவளம் சாலையில் கொட்டியது. அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குடியேறியதை தொடர்ந்து அருகில் உள்ள ஜோதி நகர் பகுதியையொட்டி குப்பை கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணி நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதி நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குப்பை வாகனங்களை சிறை பிடித்துள்ளனர். பின்னர் இடம் மாற்றப்பட்டு தற்போது கேளியம்மன் கோவில் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது
தற்போது அந்த பகுதியை ஒட்டி புதிய புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கும் குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர்.
அண்மையில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அவற்றில் கிடக்கும் கழிவுகளை எடுத்து செல்ல வருவோர் குப்பைகளை தீயிட்டு எரித்து விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக உருவான புகை கேளியம்மன் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதி அருகே குப்பைகளை கொட்டக்கூடாது என்றும், அதை எரிக்கக் கூடாது என்றும் கூறி அங்கு குப்பைகளை கொட்ட வந்த லாரிகள், டிராக்டர்களை நேற்று சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 3 மணி வரை நீடித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பொதுமக்கள் உடன்படாததால் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டதை தொடர்ந்து மாற்று இடத்தில் கொட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.