தூத்துக்குடி
கயத்தாறில்இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
|கயத்தாறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை இல்லை
கயத்தாறு சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். டெய்லர். இவரது மகன் ஜெயசீலன் என்ற ரமேஷ் (வயது 35). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லூர்து மேரி பிரின்சு(30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது.
இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் ஜெயசீலன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தற்கொலை
மேலும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் லூர்துமேரி பிரின்சு மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறி அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று மாலையில் வேலைக்குசென்று விட்டு மாலையில் ஜெயசீலன் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 10 மணியளவில் அவர் ஊரிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது மனமுடைந்த நிலையில் இருந்த லார்துமேரி பிரின்சு வீட்டு படுக்கை அறையிலுள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீசார் விசாரணை
சிறிது நேரத்தில் கடையிலிருந்து ஜெயசீலன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு படுக்கையறையில் மனைவி பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்தவீட்டுக்கு திரண்டு சென்றுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ வீட்டிற்கு விரைந்து சென்று, தூக்கில் தொங்கி கொண்டிருந்த லூர்துமேரிபிரின்சின் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.