தூத்துக்குடி
காயாமொழியில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
|காயாமொழியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழியுறுத்தி பொதுமக்கள் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தனர்.
திருச்செந்தூர்:
காயாமொழியில் சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வழியுறுத்தி பொதுமக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தனர்.
விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு
திருச்செந்தூர் அருகே காயாமொழியில் சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் விளையாட்டு மைதான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நேற்று காயாமொழி பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதையடுத்து நேற்று காயாமொழி பஜாரில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் தாலுகா துணை தாசில்தார் சங்கரநாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம் கோரிக்கைகளை வலியுறுத்தி காயாமொழி பாஜாரில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி விளையட்டு மைதானத்தை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். விளையாட்டு மைதான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு காரணமான அதிகாரிகள் உள்ளிட்டோரை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, பள்ளி மாணவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் முழுமையாக பயன்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே விளையாட்டு மைதானம் அரசு மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் அரசு ஆவணமாக இருந்து வரும் நிலையில், அதை முறையாக பட்டா ஆவணமாக பள்ளி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு...
விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து காயாமொழி பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு இடம் அளித்து, அந்த மக்களை ஏமாற்றியுள்ள நிலையில், அவர்களுக்கு காயாமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நத்தம் புறம்போக்கு இடத்தில் அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் காயாமொழியில் பரபரப்பு நிலவியது.