தூத்துக்குடி
காயல்பட்டினத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய2 வாலிபர்கள் கைது
|காயல்பட்டினத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் வீடுபுகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த 2 பேரும் மீண்டும் வீடுகளில் கைவரிசை காட்ட மோட்டார் சைக்கிளில் வந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
வீடுபுகுந்து திருட்டு
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி பகுதியில் வசித்து வருபவர் யூசுப் சாஹிப். இவர்கள் வீட்டில் மாமியார் சத்திஹஜிதாவும் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ம்தேதி இவரும், மனைவி சம்சு பாத்திமாவும் வீட்டிலிரு்து புறப்பட்டு புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று விட்டனர்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்திஹஜிதா தனது மற்றொரு மகளான யூசுப் சுலேகாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதேசமயம் தினமும் காலையில் யூசுப் சாஹிப் வீட்டிற்கு சித்தி ஹஜிதா வந்து பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி காலையில் அவர் வந்தபோது, மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று, பீரோவிலிருந்த தங்க நெக்லஸ், ஒரு ஜோடி கம்மல், ஒரு மோதிரம், மற்றும் ரூ.39 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
போலீசாரிடம் சிக்கினர்
இது குறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் திடீரென்று திருப்பி கொண்டு வந்த வழியே தப்பி சென்றனர். போலீசார் துரத்தி சென்று மோட்டார் சைக்கிளை மடக்கி நிறுத்தி, அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
மீண்டும் கைவரிசை காட்ட...
விசாரணையில், அவர்கள் காயல்பட்டினம் யூசுப் சாஹிப் வீட்டில் திருடியவர்கள் என்பதும், அவர்கள் திருடிய பணம் மற்றும் நகைகளை விற்று கோவைக்கு சென்று உல்லாசமாக இருந்துவிட்டு, மீண்டும் காயல்பட்டின் பகுதி வீடிகளில் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கி கொண்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், அவர்கள் தென்காசி சாலையடியூர் கீழத்த்தெரு முருகன் மகன் மணிகண்டன் என்ற மாரி (வயது 28), ஆலங்குளம் வெங்கடாம்பட்டி லட்சுமியூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணப்பாண்டி மகன் ராஜ்குமார்(32) என்பது தெரியவந்தது.
அந்த 2 பேரையும் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேராவூரணி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான மணிகண்டன் மீது தூத்துக்குடி, ஆறுமுகநேரி, தென்காசி உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.