கரூர்
கரூரில், பா.ஜ.க.வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
|கரூரில், பா.ஜ.க.வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பதவி விலகக்கோரி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் பா.ஜ.க.வின் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் குவிந்தனர். தொடர்ந்து மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் பா.ஜ.க.வினர், அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலகக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் ஏராளமான போலீசார் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே இரும்பு தடுப்பு அமைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர பரிசோதனை செய்த பிறகே வாகனங்களை அனுப்பி வைத்தனர்.