கரூர்
கரூரில், கரும்பு விற்பனை அமோகம்
|கரூரில், பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கரும்பு விற்பனை அமோகம்
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தை மாதம் 1-ந்தேதி பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பினை விரும்பி சாப்பிட்டு வருவது உண்டு. மேலும் பொங்கல் பண்டிகை அன்று மண் பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் காய்கறிகளை படையலிட்டு அறுவடை செய்த நெற்கதிர்கள் மற்றும் கரும்பை வைத்தும் வீடுகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் நகரில் உள்ள வெங்கமேடு மேம்பாலம், நகராட்சி அலுவலகம், தாந்தோணிமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் கரும்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதில், ஒரு ஜோடி கரும்பு உயரம் மற்றும் தடிமன் ஆகியவற்றுக்கு ஏற்ப ரூ.40, ரூ.60, ரூ.80 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரத்து குறைவு
இதுகுறித்து கரும்பு விற்பனை செய்யும் பெண் வியாபாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி கரும்புகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் காரவல்லி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கரும்புகளை நேரடியாக சென்று வாங்கி வந்து, கரூரில் விற்பனை செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு ஒரு கரும்பு ஜோடி ரூ.100, ரூ.150 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு கரும்பின் வரத்து மற்றும் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கரும்பை தேடி வந்து வாங்கி செல்கின்றனர். விற்பனை நன்றாக உள்ளது, என்றார்.