கரூர்
கரூரில், ஓட்டுக்கு பணம்-பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு என சுவரொட்டி போஸ்டர்
|கரூரில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம்-பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 43). தொழில் அதிபர். இவர் கடந்தாண்டு நடந்த கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அதில், அவர் 335 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவர் கரூர் மாநகராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் வெற்றி பெறும் வார்டு கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கரூர் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது அவரது பெயரில் கரூர் மாநகரம் முழுவதும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில், இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள்: 25-2-2023 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் நானும் தமிழர் ராஜேஷ் கண்ணன், கரூர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் வெளிவந்த நிலையில் இப்படி ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.