கரூர்
கரூரில், பிளஸ்-2 பொதுத்தேர்வினை 10,156 பேர் எழுதினர்
|கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வினை 10,156 பேர் எழுதினர். தேர்விற்கு 1,190 பேர் வரவில்லை.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 43 மையங்களில் தமிழ்பாடத்தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின், பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளி வரை கொண்டு வந்து விட்டு வாழ்த்துகளை கூறி அனுப்பி வைத்தனர்.
மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் ஒன்றாகவும், தனித்தனியாக அமர்ந்து படித்தனர். பின்னர் தேர்வின் போது மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர் எடுத்துரைத்தார்.
10,156 பேர் எழுதினர்
பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர்.
10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். கரூர் மாவட்டத்தில் 106 பள்ளிகளை சேர்ந்த 5,498 மாணவர்களும், 5,786 மாணவிகளும், தனிதேர்வர்கள் 64 பேர் என என மொத்தம் 11,348 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் பாடத்தேர்வை 10,156 பேர் கலந்து கொண்டு எழுதினர். இதில் 742 மாணவர்களும், 437 மாணவிகளும், 11 தனிதேர்வர்களும் என மொத்தம் 1,190 பேர் தேர்வு எழுத வரவில்லை.
91 பறக்கும் படை
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்வறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 46 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 46 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 793 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். கரூர் மாவட்டத்தில் 91 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கி தேர்வு, மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு மையத்தை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உடனிருந்தார். தேர்வு எழுத முடியாத சூழலில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத தனியாக ஆசிரிய-ஆசிரியைகள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதி கொடுத்தனர்.
தனித்தேர்வர்கள்
கரூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களில் தமிழ் பாடத்தேர்வெழுத 28 ஆண்களும், 36 பெண்களும் என மொத்தம் 64 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 24 ஆண்கள், 29 பெண்கள் என 53 பேர் தேர்வு எழுதினர். 4 ஆண்கள், 7 பெண்கள் என 11 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தேர்வான ஆங்கில பாடத் தேர்வு பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நாளை (புதன்கிழமை) நடக்கிறது.