கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|கன்னியாகுமரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த இடங்களின் முன்பு சிலர் நடை பாதைகளை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கன்னியாகுமரியில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது. இந்த பணி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில், பேரூராட்சி சுகாதார அலுவலர் முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
---