< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் கடல்சீற்றம் நீடிப்பு; படகு போக்குவரத்து பாதிப்பு
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் கடல்சீற்றம் நீடிப்பு; படகு போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
1 July 2022 11:13 AM IST

கன்னியாகுமரியில் இன்று 2-வது நாளாக கடல்சீற்றம் நீடிப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி:

இன்று காலை 2-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் திடீர் என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர். மேலும் கடல் சீற்றம் குறையும் பட்சத்தில் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மேலும் செய்திகள்