< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தினத்தந்தி
|
17 Oct 2022 4:49 PM IST

கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தார்.

இந்த நிலையில் அஸ்வினுக்கு 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. அதை தொடர்ந்து அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும் அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக சிறுவனின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இன்று தற்போது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் உயிரிழந்ததையடுத்து பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாணவருக்கு சக மாணவனின் தாயார் விஷம் கொடுத்து மாணவன் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியது.

மேலும் செய்திகள்