காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு தீர்வு
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத்
காஞ்சீபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் லோக் அதாலத் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், நீதிபதியுமான கயல்விழி வரவேற்று பேசினார். காஞ்சீபுரம் வரதராஜர் நகரை சேர்ந்த எஸ்.மோகன்ராஜ்க்கு கடந்த 14.8.2019 அன்று நடந்த விபத்தில் வலது கால் முழுமையாக பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது மணல் ஏற்றி சென்ற லாரி மோதியது தொடர்பாக அவர் கோர்ட்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
ரூ.12 கோடிக்கு தீர்வு
வழக்கை விசாரித்த லோக் அதாலத் மோகன்ராஜ்க்கு ரூ.49 லட்சம் நஷ்டஈடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்த தொகையை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் லோக் அதாலத் மோகன்ராஜிடம் வழங்கினார்.
லோக் அதாலத்தில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டதாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் நீதிபதிகள் சரண்யா செல்வம், ராஜேஸ்வரி, வக்கீல்கள் சங்க தலைவர்கள் ஜான், கார்த்திகேயன், அரசு வக்கீல் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நீதிபதி வாசுதேவன் நன்றி கூறினார்.