< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
11 Dec 2022 10:30 AM GMT

காஞ்சீபுரத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு கங்கை அம்மன் கோவில் தெரு, கைலாசநாதர் மேட்டு தெரு மற்றும் எல்லப்பன் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தொடர் மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் மழைநீரில் சேதம் அடைந்தது.

இதற்கு முக்கியமான காரணமாக தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சாலை மறியல்

இதேபோல் புகழ் பெற்ற தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் கோவில் அருகே கால்வாய் அமைக்கும் பணி மெத்தனமாக நடைபெறுவதால் அந்த பகுதியில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து மஞ்சநீர் கால்வாய் நோக்கி செல்கிறது. இந்த பகுதியில் புகழ் பெற்ற ஆஸ்பத்திரி மற்றும் அரிசி ஆலைகள், புத்தேரி செல்லும் பாதை மற்றும் கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் இந்த பகுதிக்கு செல்ல முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புத்தேரி தெரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீர் செல்ல கால்வாயில் தூர்வாரி நடவடிக்கை எடுத்ததையடுத்து அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்