காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து முதியோர் இல்ல பதிவுகளை 31-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து முதியோர் இல்ல பதிவுகளை வருகிற 31-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள், ஓய்வு கால இல்லங்கள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னை ஐகோர்ட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007-ன் கீழ் அரசு சில அறிவுரைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து, 24 மணிநேரம் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவதேவை, சுத்தமான குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ பாதுகாப்பு, பொழுதுபோக்கு மற்றும் சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்களும் தவறாமல் கட்டாயம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்திட வேண்டும். தவறும் பட்சத்தில் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முதியோர் இல்லங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் முதியோர் இல்லங்களில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் விரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம், முதல் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்:044-27239334) அணுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.