தேனி
கம்பம் நகராட்சியில்சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்
|கம்பம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.
கம்பம் நகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் விலையில்லா நவீன 4 சக்கர தள்ளுவண்டிகள் வழங்கப்படுகிறது.
கம்பம் நகராட்சியில் ஆயிரத்து 469 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அதில் சாலையோர வியாபாரிகள் நலவாரிய அடையாள அட்டை, சங்கத்தில் பதிவு செய்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் 90 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு விலையில்லா நவீன 4 சக்கர தள்ளு வண்டிகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், நவீன 4 சக்கர தள்ளுவண்டி மூலம் ஒரே இடத்திலோ அல்லது பல்வேறு பகுதிகளுக்கோ சென்று பொருட்களை விற்பனை செய்ய முடியும். இந்த வண்டி எளிதில் தள்ளிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பாலமுருகன், நகராட்சி பொறியாளர் பன்னீர், கட்டிட ஆய்வாளர் சலீம் மற்றும் கவுன்சிலர்கள், சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.