தேனி
தேனியில் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
|தேனியில் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது.
தேனியில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் தொடங்கி தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு ராஜவாய்க்கால் உள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. இதனால் தேனியில் மழை பெய்யும் போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் குளமாக தேங்குகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நேரு சிலை சிக்னல், மதுரை சாலை ஆகிய இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வரவில்லை. இதையடுத்து மழைநீர் சாலைகளில் தேங்குவதை தடுக்க தற்காலிக ஏற்பாடாக நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த வாய்க்காலை தூர்வார திட்டமிடப்பட்டது. அதன்படி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் இந்த வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கியது. நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் இந்த பணிகளை தொடங்கி வைத்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.