தேனி
தேனியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|மின் கட்டண உயர்வை வலியுறுத்தி தேனியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேட்டில் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு மக்களை, தொழில் நிறுவனங்களை அதிகம் பாதிப்பு அடைய செய்துள்ளது. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தியது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது தொடங்கிய திட்டங்களை தான், மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்து வருகிறார். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்" என்றார்.
இதில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.