தேனி
தேனியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம்
|தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய உணவகங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி 2-வது தவணை செலுத்தி 9 மாதம் ஆகிவிட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தவணையான பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியுடையவர்கள். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் 18 முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். அங்கு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொகையை செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவது தொடர்பாக மருத்துவப்பணிகள் இணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய உணவகங்கள் மற்றும் தங்கும் இடங்களில் பணிபுரிகின்ற பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.