கன்னியாகுமரி
அரசு மருத்துவக்கல்லூரியில் டாக்டர்கள் தர்ணா
|ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் தர்ணா
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சோதனை நடத்தியதாகவும், எனவே அதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மதுரை மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையம் முன் நேற்று டாக்டர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை
போராட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர்கள் ராஜேஷ்குமார், மாதவன், எட்வின், பொருளாளர் அருள் வெங்கடேஷ், மகப்பேறு துறை தலைவர் சுந்தரவாணி, டாக்டர் பகவதிபிள்ளை உள்ளிட்ட ஆண் மற்றும் பெண் டாக்டர்கள் பங்கேற்று கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து டாக்டர் சுரேஷ் கூறுகையில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார அலுவலரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். மகப்பேறு டாக்டர்களின் பணிச்சுமை, மகப்பேறு மரண தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. எங்கள் சங்கத்தில் உள்ள சுமார் 100 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.