தேனி
அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்:தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
|அரசு பொதுத்தோ்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு தேனி முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, 'தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் அதற்காக மாணவ, மாணவிகளுக்கு எழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி போன்றவை அளிக்க வேண்டும்.
கற்றலில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும். பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்தாலோ, மழை காலங்களில் மழை நீர் ஒழுகும் சூழல் ஏற்பட்டாலோ உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.