விழுப்புரம்
செஞ்சியில் ரூ 5 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
|செஞ்சியில் ரூ 5 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
செஞ்சி
செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து செஞ்சிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் கடையம் பகுதியில் நீர் உந்து நிலையம் அமைப்பது, செஞ்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் இயங்கும் தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, கொத்தமங்கலம் ஏரி மற்றும் வழுக்கம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ரூ.52 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு மற்றும் குடிநீர் குழாய் அமைப்பது, பல்வேறு இடங்களில் நீர்த்தேக்க தொட்டி சுற்றுச்சுவர், சிமெண்ட்டுசாலை, தார் சாலை அமைப்பது என்பது உள்பட மொத்தம் ரூ.5 கோடியே 15 லட்சம் மதிப்பில் 18 வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது, செஞ்சி நகரை பசுமை பகுதியாக மாற்றும் நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கு 10 மரக்கன்றுகள் வழங்கி நடவு செய்து தருவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரா, அஞ்சலை, லட்சுமி, சீனிவாசன், சுமித்ரா, சங்கர், ஜான் பாஷா, அகல்யா, சிவக்குமார், மோகன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.