< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பனிமயமாதா ஆலய தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

பனிமயமாதா ஆலய தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் ஆக.3-ந் தேதி இயக்கப்படுகிறது.

திருவிழா

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இந்த ஆண்டு தங்கத்தேரோட்டம் நடப்பதால், வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகளை வலியுறுத்தினார். அதன்பேரில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்

இந்த சிறப்பு ரெயில் (06005) 3.8.23 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. அதே போன்று மறுமார்க்கத்தில் 4.8.23 அன்று சிறப்பு ரெயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

மேலும் விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மீண்டும் சென்னைக்கு செல்வதற்கு வசதியாக 5.8.23-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், 6.8.23-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்