புதுக்கோட்டை
ஈரோடு இடைத்தேர்தலில் பணத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி: தேர்தல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்-எச்.ராஜா வலியுறுத்தல்
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே தேர்தல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என எச்.ராஜா கூறினார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்
பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் தி.மு.க. அரசு இரட்டை நிலைப்பாடு வகிக்கிறது. அவசர சட்டம் கொண்டு வந்த பின் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?. இவர்களது நோக்கம் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது அல்ல. கவர்னர், மத்திய அரசிடம் வம்பு இழுக்கவே இதனை செய்கின்றனர்.
சைபர் கிரைம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்பதால் அதனை சட்டரீதியாக கவர்னர் திருப்பி அனுப்பினார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை மீண்டும் இயற்றி அனுப்புவோம் என்கிறார். அவ்வாறு அனுப்பினால் அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்புவார். ஜனாதிபதி அதனை சட்ட ஆலோசனை அல்லது சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கேட்கலாம். இதை சட்டரீதியாக தான் செய்ய முடியும்.
அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணத்தை கொடுத்து, மக்களை பட்டியில் அடைத்து தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. வியாபாரத்திற்காக கொண்டு சென்ற பணத்தை பிடித்த தேர்தல் பார்வையாளர்கள், அரசியல்வாதிகள் கொண்டு சென்ற பணத்தை பிடிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு நன்றாக தான் உள்ளது. பா.ஜனதா பற்றி விமர்சிக்க கூடாது என அ.தி.மு.க.வினரை எடப்பாடி பழனிசாமி கண்டித்திருக்கிறார். மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திட்டமிட்டபடி நடைபெறும். பா.ஜனதா தலைமையில் தமிழகத்தில் மாற்றம் வரும். வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்ததில் தி.மு.க.வை சேர்ந்த நபர்களாக இருப்பதால் தொல்.திருமாவளவன் அமைதி காக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.