ஈரோடு கிழக்கு தொகுதியில்: வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு
|ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.
2 வழக்குகள் பதிவு
இந்தநிலையில் வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்யப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறும்போது, ''குக்கர் வினியோகம் செய்ததாக வந்த தகவலை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி 2 இடங்களில் குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'', என்றார்.