ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில்3,552 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.70 கோடி கடன் தள்ளுபடி;அமைச்சர் சு.முத்துசாமி சான்றிதழ் வழங்கினார்
|ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 552 மகளிர் சுய உதவிக்குழுக்களின் ரூ.70 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழை பெண்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 552 மகளிர் சுய உதவிக்குழுக்களின் ரூ.70 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழை பெண்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
கடன் தள்ளுபடி
கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா ஈரோடு ரங்கம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெண்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கியும், புதிய ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 552 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள 35 ஆயிரத்து 907 பெண்கள் பெற்ற கடன் மற்றும் வட்டி தொகையான ரூ.70 கோடியே 6 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதற்கான சான்றிதழ்கள் பெண்களிடம் வழங்கப்பட்டது.
புதிய ரேஷன் கடைகள்
ஈரோடு மாவட்டத்தில் 868 முழுநேர ரேஷன் கடைகளும், 319 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 1,187 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 337 குடும்பத்தினர் பொருட்களை பெற்று பயன் பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் புதிதாக 14 முழுநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதன் மூலமாக 10 ஆயிரத்து 186 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுகிறார்கள். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இந்த விழாவில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர், மொடக்குறிச்சி, பவானிசாகர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 14 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதிவாளர்கள் நர்மதா, ரவிச்சந்திரன், கந்தசாமி, ராமநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.