ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில்7½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
|ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 7½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு பெறும் போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த 3-ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை சுமார் 90 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விட்டதாகவும், நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரிசி ரேஷன்கார்டு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகி ஜான் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை மறுநாள் (அதாவது நாளை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடையிலும் சுமார் 200 பேர் வரை பொருட்களை வாங்கி செல்ல டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு கார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பப்பட்டுவிட்டது. கரும்பு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைவருக்கும் வழங்கி முடிக்கப்பட்டுவிடும்' என்றார்.