ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழை
|ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது.
பெருந்துறை
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக பவானியில் 111.6 மில்லி மீட்டர் மழை பெய்தது.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வெயில் வாட்டியது. பின்னா் மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. இதையடுத்து இரவு 7 மணிக்கு குளிர் காற்று வீசியது. இதைத்தொடர்ந்து 9 மணிக்கு கன மழை பெய்ய தொடங்கியது. இந்த கன மழை 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை காரணமாக பவானி பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. பவானி பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 111.6 மி.மீட்டர் மழை பதிவானது.
இந்த மழையால் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெருந்துறை
பெருந்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக பெருந்துறை- ஈரோடு ரோட்டில் செட்டித்தோப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் செட்டித்தோப்பு பகுதியில் உள்ள பெருந்துறை- ஈரோடு ரோட்டில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. ரோட்டில் தெப்பக்குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கனரக வாகனங்கள் மட்டும் அந்த வழியாக சென்றது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை பெருந்துறை பவானி ரோடு, கந்தாம்பாளையம் வழியாக செட்டிதோப்புக்கு அடுத்து உள்ள ஈரோடு பிரிவு வந்து பின்னர் அங்கிருந்து ஈரோட்டுக்கு சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபட்டனர்.
அந்தியூர்
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை, தாளக்கரை, வரட்டுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21.95 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 23 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 22.28 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 51.30 மில்லி மீட்டர் மழை பெய்தது.
பவானிசாகர்
பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பவானிசாகர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு பெய்ய தொடங்கிய கன மழை நள்ளிரவு 12 மணி வரை கொட்டித்தீர்த்தது. அதன் பின்னர் நேற்று காலை 6 மணி வரை விடிய விடிய மழை தூறி கொண்டே இருந்தது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பவானி-111.60, பெருந்துறை-96, சத்தியமங்கலம்-59, கொடுமுடி-56, கவுந்தப்பாடி-55.60, வரட்டுப்பள்ளம்-51.30, கொடிவேரி-40, பவானிசாகர்-29.20, கோபி 26.20, அம்மாபேட்டை-25.20, எலந்தகுட்டைமேடு-23, குண்டேரிப்பள்ளம்-20, மொடக்குறிச்சி-19, ஈரோடு-17, சென்னிமலை-7, தாளவாடி-2, நம்பியூர்-2.
பவானியில் அதிகபட்சமாக 111.6 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாளவாடி
தாளவாடி ஆசனூர், அரேப்பாளையம், புதுதொட்டி, திம்பம், காளி திம்பம், பெஜலட்டி, தலமலை, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைகால் அரேபாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த கரும்பு பயிரை வெள்ளம் அடித்து சென்றது.