ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில்நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
|ஈரோடு மாநகராட்சி நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வருவாய் ரூ.629 கோடியாகவும், செலவு ரூ.622 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வருவாய் ரூ.629 கோடியாகவும், செலவு ரூ.622 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரி
ஈரோடு மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, மாநகராட்சியின் வருவாய் மற்றும் மூலதனநிதி, குடிநீர், வடிகால்நிதி, ஆரம்ப கல்வி நிதி என மொத்த வருவாய் வரவு ரூ.629 கோடியே 12 லட்சம் ஆகும். மொத்த மூலதன செலவு மற்றும் சாதாரண செலவு என ரூ.622 கோடியே 89 லட்சம் ஆகும். உபரி ரூ.6 கோடியே 22 லட்சம் ஆகும்.
சொத்துவரி மூலம் மட்டும் ரூ.58 கோடியே 70 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருந்து வருவாய் நிதிக்கு ரூ.26 கோடியே 30 லட்சமும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிக்கு ரூ.23 கோடியே 30 லட்சமும், ஆரம்ப கல்வி நிதிக்கு ரூ.9 கோடியே 10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மூலமாகவும் நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊதிய செலவினம்
மாநகராட்சிக்கு பதிவுத்துறை மூலமாகவும், சொத்து மாற்றங்களுக்குரிய வரியாக ரூ.8 கோடியும், கேளிக்கை வரியாக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ.11 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநகராட்சி வணிக வளாகம், பஸ் நிலையம், வாகன நிறுத்தம் மற்றும் சிறு குத்தகை இனங்கள் மூலமாக நடப்பு நிதி ஆண்டில் ரூ.15 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒப்பந்ததாரர், பிளம்பர், பதிவு கட்டணம், தொழில் உரிம கட்டணம், குடிநீர் பாதாள சாக்கடை கட்டணம் மூலமாக ரூ.54 கோடியே 98 லட்சம் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் மாநகராட்சி பணியாளர்களுக்கு நடப்பாண்டுக்கான ஊதிய செலவினம் ரூ.90 கோடியே 76 லட்சமாகவும், ஓய்வூதிய பயன்களுக்காக ரூ.25 கோடியும், நிர்வாக செலவினத்துக்காக ரூ.5 கோடியே 15 லட்சமும் வழங்கப்பட உள்ளது. இதேபோல் வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவினங்களுக்காக ரூ.71 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
பஸ் நிலையங்கள்
மாநகராட்சியில் வேலை பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களுக்காக அசல் மற்றும் வட்டி செலவினங்கள் ரூ.23 கோடியே 88 லட்சம் உள்ளது. மாநகராட்சியில் வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் நடப்பு நிதியாண்டில் மூலதன பணிகளுக்காக ரூ.358 கோடியே 16 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் தார் சாலைகள் சீர் அமைப்பதற்கு ரூ.7 கோடியே 20 லட்சம், மண் சாலையை தார் சாலையாக மாற்றுவதற்கு ரூ.5 கோடிக்கான கருத்துகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ரூ.10 கோடியில் கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 2 புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. தற்போது சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், சத்தி ரோட்டில் 14.55 ஏக்கர் பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான கருத்துரு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்க நாணயம்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடப்பாண்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பராமரிப்பு செலவுக்காக ரூ.8 கோடியே 68 லட்சம் மானியம் வழங்க அரசுக்கு கருத்துகள் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ரூ.100 கோடி செலவில் சீரமைத்து இருபுறங்களிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 கோடி செலவில் வடிகால் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.