ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மீண்டும் இயங்க தொடங்கியது
|விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஈரோடு:,
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகளில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் மட்டும் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடந்து வந்தது.
ரயான் துணிகளின் விலை குறைந்ததால் மார்க்கெட்டில் ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட குறைவான விலைக்கு விற்பனையானது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்களுக்கு ஒரு மீட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்பட்டது.
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் இதனை சமாளிக்கும் வகையில் கடந்த 3-ந் தேதி முதல் ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டன. இதனால் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளொன்று ரூ.6 கோடி வர்த்தகம் முடங்கியது.
மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து 8 நாட்களாக நடந்தது. இதனால் ரூ.48 கோடி வர்த்தகம் முடங்கியது. 1 கோடியே 92 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கைத்தறி துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் முதற்கட்டமாக வேட்டி தயாரிப்பு அனுமதி வழங்குவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:- ரயான் துணிக்கு மீட்டருக்கு 3 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்ட காலத்திலும் மீட்டருக்கு 25 காசுகள் மட்டுமே உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் கைத்தறித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம். அப்போது அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் முதற்கட்டமாக வேட்டி தயாரிப்பு அனுமதி வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
இதனை ஏற்று விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 8 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கின.