< Back
மாநில செய்திகள்
வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
மாநில செய்திகள்

வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
18 Oct 2023 6:32 AM IST

வரதட்சணை புகாரில் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்கு பதிய முடியும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


வரதட்சணை புகார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கருப்பாயி என்ற பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த வனிதா என்பவர் கடந்த 2020-ம் ஆண்டில் தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் சேர்த்து உள்ளனர்.

இதுகுறித்து ஆண்டிபட்டி கோர்ட்டில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்துவிட்டனர். எனவே, போலீசார் முறையாக விசாரிக்காமல் தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ரத்த உறவுகள்

இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில், கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும் என உள்ளது. இதற்கு மாறாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணை முடிவில், வனிதா வரதட்சணை கொடுமை புகார் தரும் போது, தனது கணவரின் 2-வது மனைவியின் உறவினர்கள் மீதும் புகார் கொடுத்துள்ளார். ரத்த உறவுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் மீது புகார் கொடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்து மனுதாரர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்