விழுப்புரம்
தேவதானம்பேட்டையில்நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
|தேவதானம்பேட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டையை சேர்ந்த விவசாயிகள், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
செஞ்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான தேவதானம்பேட்டை கிராமத்தில் இன்று வரை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் கிராமத்தில் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட விவசாயிகள், நெல் சாகுபடி செய்து வருகின்றனர். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளின் நெல்லுக்கு ஏற்ற விலை வழங்குவது கிடையாது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
இதனால் விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை, உள்ளூர் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு போடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ளதால் அங்கு செல்ல கூடுதல் செலவாகிறது. எனவே எங்கள் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்தால் எங்களுடைய நெல்லுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். எங்கள் கிராமத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனால் மற்ற விவசாயிகளும் பயனடைவார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி ஏற்கனவே கிராம சபையில் 3 முறை தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே எங்கள் கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.