கடலூர்
கடலூரில், போக்குவரத்து விதிமீறல்: 4 லாரிகள், 16 ஆட்டோக்கள் பறிமுதல் ரூ.4 லட்சம் அபராதம் வசூல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை
|கடலூரில், போக்குவரத்து விதிமீறியதாக 4 லாரிகள், 16 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அனுமதியின்றியும், இன்சூரன்ஸ் இல்லாமலும், அதிவேகமாகவும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியும் சில ஆட்டோ டிரைவர்கள் செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அண்ணா பாலம் அருகில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி, ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அனுமதியின்றியும், இன்சூரன்ஸ் இல்லாமலும், புதுப்பிக்காமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து 16 ஆட்டோக்களை அந்த குழுவினர் பறிமுதல், செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் அபராதமாக வசூல் செய்தனர்.
முன்னதாக அதிக பாரம் ஏற்றிச்சென்ற 4 லாரிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் வசூல் செய்தனர்.