< Back
மாநில செய்திகள்
கோவையில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..?!
மாநில செய்திகள்

கோவையில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..?!

தினத்தந்தி
|
20 March 2024 7:04 PM IST

நான்கு பேர்களின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை,

கோவை தெலுங்கு பாளையம் மணி ரைஸ் மில் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 46). இவருடைய மனைவி விசித்திரா( 42), மகள் ஸ்ரீநிதி( 22 ), மற்றொரு மகள் ஜெயந்தி (14 ), தொழில் அதிபரான ராமச்சந்திரன் மது பாட்டில்களுக்கான மூடிகளை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமாக ரைஸ் மில்லும் இருந்துள்ளது. அக்காள் மற்றும் குடும்பத்தினர் அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்ரீநிதி பட்டப்படிப்பு முடிந்து கனடாவில் இருந்து கோவை வந்து இருந்தார். ஜெயந்தி தனியார் பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 9.30 மணிக்கு வேலைக்காரி சுமதி வீட்டு வேலைக்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராமச்சந்திரன், வேலைக்காரியை வீட்டுக்கு சென்று விடுமாறு கூறியுள்ளார். இதனால் சுமதி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் இவர்களது பங்களா வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்ததால் அருகில் உள்ள அக்காள் பகல் 12 மணியளவில் தம்பியின் வீட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றார். படுக்கை அறைக்கு சென்று பார்த்த ராணி அதிர்ச்சி அடைந்தார். அங்கு 4 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர் .

ராமச்சந்திரன் மகள்கள் ஸ்ரீநிதி, ஜெயந்தி ஆகியோர் கட்டிலிலும், மனைவி விசித்திரா தரையிலும் பிணமாக கிடந்தனர். இதனால் ராணி அலறி அடித்துக் கொண்டு வந்து உறவினர்களிடம் தெரிவித்தார். உறவினர்களும் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நான்கு பேரும் சயனைடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலைகள் குறித்து செல்வபுரம் போலீசுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

.போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன் நான்கு பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் அந்த வீட்டில் தீவிர சோதனை நடத்தினர் அப்போது தற்கொலைக்கு முன்பு ராமச்சந்திரனின் மனைவி ஒரு நோட்டில் எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினார்கள். வெள்ளை நிற சயனைடை தண்ணீர் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த தற்கொலைகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "முதலில் ராமச்சந்திரனின் மனைவி விசித்திரா மற்றும் 2 மகள்கள் சயனைடு விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து ராமச்சந்திரனும், மீதம் இருந்த சயனைடை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொழில் அதிபர் தான் வசிக்கும் வீடு அருகே பல கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா வீடு கட்டி வந்துள்ளார். இதற்காக கடனும் வாங்கி உள்ளார். தொழில் அபிவிருத்திக்காகவும் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். சொத்துக்களை அடமானம் வைத்தும் ரூ.20 கோடிக்கு கடன் பெற்றதாகவும், சில கடனை அடைத்துவிட்டதாகவும் தெரிகிறது. மீண்டும் கடன் வாங்க மனைவியை வற்புறுத்தியபோது, அதற்கு உடன்படாததால் மனைவி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதும், பின்னர் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்