< Back
மாநில செய்திகள்
நகரங்களில்  போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாக   மாறும் நூலகங்கள்
ஈரோடு
மாநில செய்திகள்

நகரங்களில் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாக மாறும் நூலகங்கள்

தினத்தந்தி
|
27 Oct 2022 3:46 AM IST

நகரங்களில் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாக நூலகங்கள் மாறுகின்றன.

நூலகங்கள் அறிவுச்சுரங்கங்கள். நூலகத்தின் அழிவு என்பது பண்பாட்டின் அழிவாக, வரலாற்றின் அழிவாக இருக்கும். எனவே நூலகங்களை வலிமையானதாக மாற்றுவதும், அந்த நூலகங்களில் சிறந்த நூல்களை சேர்ப்பதும், அவற்றை அனைத்து தரப்பினரும் படிக்க வைப்பதும் மிக மிக அவசியம்.

நூலகங்கள்

அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் என்ற திட்டத்தை தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த மு.கருணாநிதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தினார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நூலகத்துறை மூலம் இயங்கி வந்த நூலகங்களும் தனியாக இயங்கி வந்தன.

தற்போது இந்த நூலகங்களின் நிலை எப்படி உள்ளது என்று பார்த்தால், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட நூலகங்கள் பொலிவிழந்து விட்டன. நூலகத்துறை மூலம் இயங்கும் நூலகங்கள் நகர்பகுதிகளில் சிறப்பாகவும், கிராமப்புறங்களில் தட்டுத்தடுமாறியும் இயங்கி வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நூலகத்துறை மூலம் 218 நூலகங்கள் உள்ளன. மாவட்ட மைய நூலகம், நவீன (டிஜிட்டல்) நூலகம், நடமாடும் நூலகம் ஆகியவை தலா ஒன்று, கிளை நூலகங்கள் 85, ஊர்ப்புற நூலகங்கள் 100 என அவை செயல்படுகின்றன. இந்த நூலகங்களில் நூலகர்கள் முழுமையாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். காலிப்பணியிடங்கள் உள்ள சில நூலகங்களிலும் தினசரி கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நூலக அலுவலகத்தை பொறுத்தவரை சில காலிப்பணியிடங்கள் தவிர்த்து பணியாளர்கள் முழுமையாக இருக்கிறார்கள்.

இயங்குகின்றனவா?

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் தலா ஒரு நூலகம் இயங்கி வருகிறது. ஆனால், இந்த நூலகங்கள் முழுமையாக இயங்குகின்றனவா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

எந்த கிராமத்துக்கு சென்றாலும் நூலகம் திறக்கப்படுவதில்லை. பாதுகாப்பான கட்டிடம் இல்லை. பணியாளர் இல்லை என்ற ஏதோ ஒரு காரணத்தை கூறி நூலகம் திறக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த சூழலில் நூலகங்களின் பயன்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது?.

ஓராண்டு செயல்திட்டம்

இதுபற்றி ஈரோடு மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் கல்விப்பணியாற்றி வரும் சுடர் அமைப்பு நிறுவனரும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான எஸ்.சி. நடராஜ் கூறியதாவது:-

வாசிப்பை முன்னெடுக்க தமிழ்நாடு அரசு ஓராண்டு செயல்திட்டங்களை வகுத்து உள்ளது. இந்த திட்டம் முழுமையாக நூலகங்களை மையப்படுத்தி நடைபெற இருக்கிறது. ஆனால், நூலகங்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை சேகரித்தால் மிக மோசமாகவே இருக்கின்றன. பொது நூலகத்துறை மூலம் இயங்கும் நூலகங்களை ஒப்பிடும்போது அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் பெயரளவுக்கு கூட செயல்படுவதில்லை. சத்தியமங்கலம் ஒன்றிய அளவில் பார்த்தால் கூட குன்றி, மாக்கினாங்கோம்பை என்று பல ஊராட்சிகளில் நூலகங்கள் திறக்கப்படுவது இல்லை. கொண்டையம்பாளையம் என்ற கிராம ஊராட்சியில் நூலகமே இல்லை. இவை உதாரணங்கள்தான்.

பர்கூர் மலையில் 33 கிராமங்கள் உள்ளன. 30 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. இங்கு பர்கூரில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது செயல்படுவதில்லை. இந்த மாணவ-மாணவிகளுக்கு நூலக அனுபவம் எப்படி கிடைக்கும்.

மிகவும் மோசம்

பொது நூலகத்துறை நூலகங்களின் செயல்பாடுகளை ஒப்பிடும்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை கூற வேண்டும்.

அந்த நூலகங்கள் மாவட்ட ஊராட்சிகள் துறையின் கீழ் அந்தந்த வட்டார வளர்ச்சி அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளன. கட்டிடங்கள், உள்கட்டமைப்புகளை உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகித்தாலும், நூலக நிர்வாகத்தை பொது நூலகத்துறையிடம் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும். அனைத்து நூலகங்களையும் புதுப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மட்டுமே இந்த நூலகங்களில் பணியாற்ற முடியும் என்ற நிலை இருக்கிறது.

இந்த உத்தரவில் திருத்தம் செய்து, ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள், வேலை இல்லாத பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். நூலகங்கள் தினமும் காலையும், மாலையும் திறக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களில் சிறு நூலகங்கள் அமைத்து, அதற்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டி போட முடியுமா?

தாளவாடி மலைக்கிராமமான காளிதிம்பத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூலகங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்து ஓரிரு கிராமங்களில் நூலக கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. நூலகத்துக்கு மாணவ- மாணவிகளையோ, இளைஞர்களையோ ஈர்க்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் கிராமங்களில் தற்போது படித்த பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் உரிய வழிகாட்டுதல்கள் இல்லை. அரசு பணிக்கான தேர்வு எழுத வேண்டும் என்றால் பயிற்சி மையங்களுக்கு கூட செல்லும் வசதியோ, வாய்ப்போ இல்லை. படித்து விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலைதான் உள்ளது.

எங்கள் மலைக்கிராமங்களில் படித்த இளைஞர்களை நூலகர்களாக, வேறு அரசுப்பணிகளில் நியமித்தால், நாங்கள் வருங்கால தலைமுறைக்கு உதாரணமாக இருப்போம். நூலகங்கள் மூலம் பயிற்சிகள் அளிப்போம். இன்னும் எங்கள் மலைக்கிராமங்களில் பல அன்றாட செய்திகளைக்கூட அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.. நாங்கள் எப்படி சமவெளி மாணவ-மணாவிகளுடன் போட்டிப்போட முடியும். நீட், ஜெ.ஈ.ஈ. என்று நகர்ப்புறங்களில் மாணவர்கள் தயாராகிறார்கள்.

நாங்கள் தினசரி செய்திகளைக்கூட தெரிந்து கொள்ள முடியாத அவலத்தில் இருக்கிறோம். எங்கள் கிராமங்களில் நூலகங்கள் அமையும்போது புத்தகங்களையும், நாளிதழ்களையும், அந்த கிராமத்துக்கு கல்வியையும் கொண்டு சேர்ப்போம்.

நான் மலைவாழ் மாணவர்களுக்காக 250 புத்தகங்கள் சேகரித்து வைத்து இருக்கிறேன். அவற்றை பாதுகாக்கவும், மாணவர்களை படிக்க வைக்கவும் எனக்கு இடவசதி இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே எங்கள் மலைக்கிராமங்களுக்கு நூலகங்கள் உடனடி அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1,500 சம்பளம்

சத்தியமங்கலம் அருகே அரசூரில் பகுதி நேர நூலகராக பணியாற்றும் கே.பி.ரங்கராஜன் கூறியதாவது:-

தொடக்கவேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, கடந்த 2012-ம் ஆண்டு முதல் நூலகராக பணியாற்றி வருகிறேன். மாதம் ரூ.1,500 சம்பளம் கிடைக்கிறது. சுமார் 1000 புத்தகங்கள் இருக்கும். தினசரி சரசரியாக 5 பேர் வந்து நாளிதழ்கள் படிக்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் பலர் வருவார்கள். போட்டித்தேர்வுகளுக்கு படிப்பார்கள். இப்போது யாரும் வருவதில்லை. காலை 9.30 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை திறந்து வைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி

ஈரோடு சம்பத்நகர் நவீன (டிஜிட்டல்) நூலகத்தில் படித்து வரும் இளம்பெண் எஸ்.மகாலட்சுமி கூறியதாவது:-

நான் ஆசிரியர் காலனியில் இருந்து தினமும் சம்பத்நகர் நூலகம் வருகிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சியில் உள்ளேன். இங்கு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. நாளிதழ்களும் கிடைக்கின்றன. ஆனால், போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு என்று நாளிதழ்கள் இல்லாததால் வாசிப்பாளர்கள் படித்து முடித்த பிறகே எங்களுக்கு அவை கிடைக்கின்றன. எங்களுக்காக நூலகர் ஷீலா நன்கொடையாளர்கள் மூலம் பாடப்புத்தகங்கள் வாங்கி தந்து இருக்கிறார். இதனால் எங்களால் நன்றாக படிக்க முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கைக்காட்டி வலசு பகுதியை சேர்ந்த இளைஞர் டி.சசிக்குமார் கூறியதாவது:-

நான் குரூப் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறேன். இடையூறுகள் இல்லாமல் அமைதியாக படிக்க சம்பத் நகர் நூலகம் வசதியாக இருக்கிறது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் நாங்கள் விடுமுறை இன்றி அனைத்து நாட்களும் படிக்கிறோம். எங்களுக்கு வசதியாக நூலகத்தை விடுமுறை இன்றி அனைத்து நாட்களும் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி

சம்பத்நகர் நூலகர் ஷீலா கூறியதாவது:-

நூலகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எங்கள் நூலகம் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறது. இங்கு கணினியில் தேர்வு பயிற்சி, பிரிண்டிங் கட்டணம், நகல் எடுக்கும் கட்டணத்தை சலுகை விலையில் வழங்குகிறோம். தன்னார்வ அமைப்புகளை வரவழைத்து பயிற்சிகள் அளிக்கிறோம். இதனால் சுமார் 100 மாணவ-மாணவிகள் இங்கு பயிற்சிக்கு வருகிறார்கள். தினசரி 70-க்கும் மேற்பட்டவர்கள் நூலகத்தை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வசதிகள்

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தரை ஈரோடு மற்றும் கோபி நூலகங்கள் நகர்ப்புறத்தை மையமாக கொண்டு இருப்பதால் அதிக வாசகர்களை கொண்டு உள்ளது. குறிப்பாக இந்த நூலகங்கள் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கான பயிற்சி மையமாக மாறிக்கொண்டு உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.

Related Tags :
மேலும் செய்திகள்