< Back
மாநில செய்திகள்
சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு சிலை அமைக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்
ஈரோடு
மாநில செய்திகள்

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு சிலை அமைக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்

தினத்தந்தி
|
16 Jun 2023 9:21 PM GMT

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு சிலை அமைக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

சென்னிமலை

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு சிலை அமைக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

தியாகி திருப்பூர் குமரன்

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருப்பூர் குமரனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஆகும்.

அதனால் சென்னிமலையில் தியாகி குமரனுக்கு நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து சென்னிமலையில் ரூ.3 கோடி மதிப்பில் தியாகி குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சிக்குட்பட்ட அறச்சலூர் ரோட்டில் தியாகி குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அதற்கான இடம் குறித்து வருவாய் துறையினரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

முன்னதாக சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் 22 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலர்களிடம் கேட்டார். அப்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

மேலும் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு அம்மாபாளையம் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா, மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பெட்ஷீட் உற்பத்தி மையம்

முகாசிபிடாரியூர் ஊராட்சி திருமுக மலர்ந்தபுரம் பகுதியில் மகளிர் திட்டத்தின் சார்பில் வெற்றிவேல் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் இயங்கும் பெட்ஷீட் உற்பத்தி செய்யும் மையம், குமாரவலசு ஊராட்சி பாலாஜி கார்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சந்தன மர கன்றுகள் நடும் பணி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.

குடிநீர் திட்ட பணி

அதேபோல் சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்ட 22 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 434 ஊரக குடியிருப்புக்காக வெள்ளமுத்துகவுண்டன்வலசு பகுதியில் ரூ.482 கோடியே 36 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர் நர்மதா, வேளாண் உற்பத்தியாளர் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் பழனிசாமி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் பூபதி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்