ஈரோடு
சென்னிமலையில்இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
|சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னிமலை
சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரார்த்தனை
சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவ போதகர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவருடைய வீட்டுக்கு சென்று பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவ போதகர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் 2 பேரை கைது செய்தனர்.
கண்டனம்
இதற்கிடையே கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் சென்னிமலையை பற்றி தவறாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பேச்சாளர் மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது சென்னிமலையை பற்றி தவறாக பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானின் புகழ் குறித்து பெண்கள் பாடல்கள் பாடினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், பள்ளி வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்ல முடியாது என சென்னிமலை பகுதியில் சில பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டதால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது.