சென்னையில் பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை
|நண்பன் கொலைக்கு பழிக்குப் பழியாக ரவுடியை கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்,
சென்னை, திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் ராஜ்குமார் (வயது28). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் நேற்று இரவு 10மணி அளவில் நெற்குன்றம் மந்தைவெளி தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் ராஜ்குமாரை வழிமறித்து பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் ராஜ்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு திருவேற்காடு பகுதியில் சண்முகம் என்பவரை ராஜ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
இவ்வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குமார் கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் நண்பர்களான பிரகாஷ், கண்ணன் இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜ்குமாரை பழிக்குப் வழியாக வெட்டி கொலை செய்து தப்பியுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.