சென்னை
மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
|‘‘மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம்’’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் முதற்கட்டமாக 10 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மற்ற கோவில்களிலும் காணொலி காட்சி மூலம் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படும்போது, பெருமழை வெள்ளத்தால் மக்களுடைய நடமாட்டம் இல்லாத நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று செயல்படுவோம்.
இந்து சமய அறநிலையத்துறை மக்கள் அறம் சார்ந்த துறைதான். மக்கள் பாதிப்பை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையிலே உணவு தயாரிக்கின்ற பணியில் நாங்கள் ஈடுபடுவோம். அன்னதானம் வழங்கும் கோவில்களில் உணவுக்கூடங்கள் இருக்கின்றன. தேவைப்படும் பட்சத்தில் நிச்சயமாக மக்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொள்வோம்.
கேள்வி:- கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழிபட்டிருப்பது பிரச்சினையை ஏற்படுத்துமா?
பதில்:- சாதி, மத, மொழி ரீதியாக மக்களை பிரித்து ஆள்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார். சாதி, மதம் சார்ந்த அரசு அல்ல தமிழக அரசு. தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குவதற்கு எப்படிப்பட்ட மதவாத சக்திகள் தலை தூக்கினாலும், அந்த மதவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கும் முதல்-அமைச்சர் தயங்கமாட்டார். மக்கள் தெளிவாகவும், முதல்-அமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளில் முழு திருப்தியோடும் இருக்கிறார்கள். அரசியலுக்காக செய்கின்ற இது போன்ற நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.