காஞ்சிபுரம்
பரணிபுத்தூரில் பழமையான மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிப்பு - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
|பரணிபுத்தூரில் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிக்கப்பட்டது. அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பருவ மழைக்காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் பரணிபுத்தூர், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து மிகுந்த வெள்ள பாதிப்புக்குள்ளானது. இதனால் போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல மதகுகள், மழை நீர் கால்வாய்கள் அமைத்து தந்தி கால்வாயுடன் இணைக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் கட்டுவதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பரணிபுத்தூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு வேறு இடத்தில் நடுவதற்காக அதிகாரிகள் வந்தனர்.
மிகவும் பழமை வாய்ந்த மரம் என்பதால் அதனை அகற்றக்கூடாது என அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு மரத்தை அகற்ற விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அங்கு இருந்த மாங்காடு போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் எந்திரங்களை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் மீண்டும் நட்டு தருவதாக அதிகாரிகள் தெரிவித்தும் பொதுமக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. மிகவும் பழமை வாய்ந்த மரம் என்பதால் அதனை அங்கிருந்து அகற்றக்கூடாது என்பதில் பொதுமக்கள் பிடிவாதமாக இருந்தனர். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து பொதுமக்கள் சம்மதத்துடன் அந்த மரம் அங்கிருந்து அகற்றி வேறு ஒரு இடத்தில் நடப்பட்டது.