சென்னை
ஆவடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|ஆவடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆவடி அடுத்த வசந்தம் நகர், ஆவடி-பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் ஆவடி ராஜ்பாய் நகரை சேர்ந்த நடராஜன் (வயது 40) என்பவரது டிரான்ஸ்போர்ட் நிறுவனம், ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த பிரதீப் குமார் (44) என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியை சேர்ந்த சண்முகம் (67) என்பவரின் அரிசி கடை, ஆவடி வசந்தம் நகரை சேர்ந்த கவுஸ் (55) என்பவர் துணிக்கடை உள்ளிட்ட 6 கடைகளின் பூட்டுகளை அடுத்தடுத்து உடைத்து ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
அதேபோல் ஆவடி அடுத்த வசந்தம் நகர் அருகே ஆவடி பூந்தமல்லி சாலையில் தமிழ்நாடு அரசின் அமுதம் கூட்டுறவு பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த வசூல் பணம் ரூ.13 ஆயிரத்து 400 மற்றும் வசந்தம் நகர் லோட்டஸ் தெருவில் உள்ள பெருமாள் (68) என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர்ஸ் கடையில் வைத்திருந்த ரூ.13 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இது குறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.