திருவள்ளூர்
அருங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் விவசாயிகள் அவதி
|அருங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கப்படாததால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் நெல், கரும்பு மற்றும் வேர்க்கடலை ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகின்றன. இங்குள்ள விவசாய நிலங்களில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் அருங்குளம் கிராமத்தில் இருந்து அடிகல்பட்டு செல்லும் சாலையை ஒட்டி விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
நெல் விளைச்சல் பாதிப்பு
ஒரு வாரம் ஆகியும் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளன. இந்த மின்கம்பங்களில் செல்லும் மின்சாரத்தால் அந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. அந்த நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது நெற்கதிர்கள் உருவாகும் இந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் நிலங்களில் தண்ணீர் விட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் நடுவதற்கு தயாராக உள்ள நாற்றுகளும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து சேதமாகும் நிலையில் உள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சாரத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் சாய்ந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.